விக்ரம் பிரபு, வாணி போஜன், கன்னட நடிகர் தனஞ்செயா, வேலராமமூர்த்தி ஆகியோரின் நடிப்பில் உருவான ‘பாயும் ஒளி நீ எனக்கு‘ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ளார்.
வழக்கமான ஹீரோ vs வழக்கமான வில்லன் என்னும் கமர்சியல் பார்மெட்டில் தான் இப்படம் உருவாகியுள்ளது. குறைந்த வெளிச்சத்தில் சரியாகப் பார்வை தெரியாத குறைபாட்டை கொண்டுள்ள இளைஞராக விக்ரம் பிரபு நடித்துள்ளார்.
ஒரு நாள் இரவு ரோட்டில் ஒரு பெண்ணுக்கு இரண்டு நபர்கள் பாலியல் தொல்லை கொடுக்க அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார் விக்ரம் பிரபு.
இன்னொரு பக்கம்
தனது தந்தையின் அரசியல் செல்வாக்கு, மதிப்பு மரியாதையும் தனக்கு கிடைக்க வேண்டும் என துடிக்கும் மகனாக நடித்துள்ளார் கன்னட நடிகர் தனஞ்செயா.
இவர் தனது தந்தையின் இடத்தை எப்படி பிடித்தார் விக்ரம் பிரபு வின் வாழ்க்கையில் எப்படி நுழைந்து தாக்கங்களை ஏற்படுத்துகிறார் என இரு கதைகளையும் இணைத்து திரில்லர் பாணியில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபுவுக்கு படத்தில் ஆக்சன் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன. அதைத் தாண்டி வித்தியாசமான ஹீரோ என்று கூறும் அளவுக்கு கதையில் எதுவும் இல்லாதது ஏமாற்றமே. அழகு பதுமையாக வரும் வாணி போஜன் தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோயினாக வந்து செல்கிறார்.
திரைக்கதையிலும் காட்சி அமைப்பின் நேர்த்தியிலும் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். காட்சிக்கு காட்சி இது “ரொம்ப பழசா இருக்கே பாஸ்….”என்று தோன்றாமல் இல்லை.
வசனங்களும் இசையமைப்பும் கூட கை கொடுக்கவில்லை. ஆறுதலாக ஒளிப்பதிவில் இவற்றையெல்லாம் ஈடு செய்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர். சண்டைக் காட்சிகளில் கவனம் வைத்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி. சில விறுவிறுப்பான ஆக்சன் காட்சிகள் பல பழைய சீன்கள் என பாயும் ஒளி நீ எனக்கு பெரிய அளவில் பிரகாசம் இன்றி வெளிவந்துள்ளது.