பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது- செல்லூர் ராஜூ
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே துவரிமான் கிராமத்தில் நடைபெற்ற சமுதாயக்கூட அடிக்கல்நாட்டு விழாவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது, அவரது கட்சித் தலைமை தான் முடிவெடுக்கும். மாநிலத்தில் செல்வாக்குள்ள கட்சித் தலைமையில் தான் கூட்டணி இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சரியாக தான் கூறியுள்ளார். அதை வரவேற்கிறேன். எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மட்டுமே உள்ளது. தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித்ஷா கூறினார். எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்.
இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுகதான். மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா? அவர் சாதாரண ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தவர். அவருடைய உழைப்பால் உயர்ந்தார். அதுபோலவே எடப்பாடி பழனிசாமியும் உயர்வார். அதிமுக vs திமுக என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல். இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை. எத்தனையோ கட்சிகள் வரும் போகும். திமுக vs பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிசாமி விடமாட்டார். அடுத்த தலைமுறை விஜய்தான், அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைபட்டுள்ளோம்” என்றார்.