லோகேஷ் கனகராஜ்,தென்னிந்திய திரை உலகின் முக்கியமான இயக்குனராக பேசப்படுபவர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் லோகேஷ் கனகராஜுக்கு பெரிய அளவிலான வெற்றியை தந்தது.
அதன் பின் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
கைதி படத்தின் மாபெரும் வெற்றியே லோகேஷ் கனகராஜுக்கு தளபதி விஜய் நடிப்பில் படம் இயக்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.
அந்த வகையில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் இவர் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
அதை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் லோகேஷ் கனகராஜிற்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.
இவ்வாறு தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயுடன் மீண்டும் இணைந்து லியோ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
மேலும் LCU – லோகேஷ் சினிமா டிக்கெட் யுனிவர்ஸ் என்ற புதிய கான்செப்ட்டை தமிழ் திரை உலகில் உருவாக்கி அதன் கீழ் ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை இயக்கி வருகிறார்.
இதுபோன்று பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்களும் வரிசையில் நிற்கின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படம் இயக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
அதே சமயம் லோகேஷ் கனகராஜ் பிரபாஸ் நடிப்பிலும் புதிய படம் இயக்கப் போவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், லியோ படத்திற்கு பிறகு பிரபாஸை வைத்து இயக்க இருக்கிறேன். அந்த படம் எங்கள் இருவரின் கேரியரிலும் மிகப்பெரிய படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிரபாஸ் தற்போது சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.