- Advertisement -
8.மனத்திற்குள் கோயிலை கட்டினார் நிஜத்தில் எழுந்தது – என்.கே. மூர்த்தி
“எடுத்த முயற்சியை கைவிடும் பொழுது நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதை உணராதவர்களே தோல்வியடைகிறார்கள்” – தாமஸ் ஆல்வா எடிசன்
நமது மனத்திரையில் திட்டங்களை காட்சிப்படுத்துவது எப்படி?

நமது மனத்திரையில் ஓடும் கருத்துக்கள் நோக்கம் இல்லாமல், குறிக்கோள் இல்லாமல் இருந்தால், வாழ்க்கையும் எந்த நோக்கமும் இல்லாமல் திசைமாறி போய்விடும்.
நோக்கம் இல்லாத மனதில் ஏராளமான குப்பைகள் தேங்கி இருக்கும். நோக்கம் இல்லாத மனம் பாழடைந்த கால்வாய், பாழடைந்த குளம் அதில் தேவையற்ற குப்பைகள், கழிவுகள் தேங்கி நிற்பது இயல்பானது.
நோக்கம் இல்லையென்றால் வாழ்க்கையில் பிடிப்பு இருக்காது. பிடிப்பு இல்லாத வாழ்க்கை கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும். அவர்களுக்கு தேவையானது எதுவும் கிடைக்காது. கிடைத்ததே பெரிதாக கருதி சந்தோஷம் கொள்வார்கள்.
வாழ்க்கையை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். வாழ்க்கையை கட்டுப்படுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்துவது. மனதை நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். மனதை கட்டுப்படுத்த தெரிந்தவர்களுக்கு அனைத்தும் கிடைக்கும். அது தான் எண்ணம் போல் வாழ்க்கை என்கிறோம்.
மனதை கட்டுப்படுத்துவது மிகவும் சுலபம். நமது ஆழ்மனதில் பெரும் செல்வந்தராக அடிக்கடி கற்பனை செய்ய வேண்டும். அல்லது நமக்கு பிடித்ததை தொடர்ந்து ஆழ்மனதில் கற்பனை செய்ய வேண்டும்.
நான் முன்பே சொன்னது போல் நமது ஆழ்மனம் அதிகமான எண்ணங்களை, உணர்வுகளை, உணர்ச்சிகளை தேக்கி வைத்திருக்கிறது. நமது அறிவுக்கு புலப்படாத பல செயல்களை ஆழ்மனம் செய்து வருகிறது. அதனால் தெளிவற்ற திட்டங்களை மனக்காட்சிப் படுத்தினால் ஏற்றுக் கொள்ளாது. பத்தோடு ஒன்றாக துாக்கிப்போட்டு விடும். ஆழ்மனதில் தெளிவான காட்சிகளை படம் பிடித்து அடிக்கடி ஆழ்மனதில் பதிவிட வேண்டும்.
வீடு கட்ட வேண்டும் என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்? பூமி பூஜை போட வேண்டும். கடக்கால் தோண்ட வேண்டும் பேஸ்மட்டம் எழுப்பவேண்டும். இப்படி படிப்படியாக காட்சிப்படுத்த வேண்டும். திரைப்படம் போல் தொடர்ந்து காட்சிப்படுத்தினால் பழையது அனைத்தும் மறைந்து புதிய லட்சியம் உருவெடுக்கும்.
திருநின்றவூரில் ஒரு ஆன்மீக கதை
அறுபத்தி மூன்று நாயன்மார்களும் சிவனுடைய பக்தர்கள். அவர்கள் வாழ்ந்தக்காலம் கி.பி 400-1000 என்று கூறப்படுகிறது. சிவனடியார்களான அந்த நாயன்மார்களுக்கு அனைத்து சிவாலயங்களிலும் சிலைகள் உள்ளது. அப்படிப்பட்ட நாயன்மார்களில் ஒருவர் பூசலார் என்பவர்.
திருநின்றவூரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். அவர் தினமும் வீட்டருகில் மேற்கூரை இல்லாதிருந்த சிவலிங்கத்தை தாிசனம் செய்த பின்னரே வீடு திரும்புவார்.
மேற்கூரை இல்லாதிருந்த சிவலிங்கத்திற்கு எப்படியாவது கோயில் கட்ட வேண்டும் என்று பூசலார் ஆசைப்பட்டார். அவர் ஏழை என்பதால் தனது ஆசையை பலரிடமும் கூறியும் யாரும் ஆலயம் எழுப்ப தேவையான பணத்தை தர முன்வரவில்லை.
ஒரு நாள் சிவலிங்கம் முன்பாக நின்று கொண்டு சிவபெருமானே என்னால் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட முடியவில்லை. ஆனாலும் வேறு எந்தப் பிறவியிலாவது உனக்கு ஆலயம் அமைப்பேன். அதற்கான தேவைகளை நீதான் பூா்த்தி செய்து வைக்கவேண்டும் என்று வேண்டினார்.
அன்று இரவு அவருக்கு கனவிலே தோன்றிய சிவபெருமான். “பக்தா நீ ஏன் கவலைப்படுகிறாய், இந்த ஜென்மத்திலேயே உன் மூலம் ஒரு ஆலயம் எனக்கு அமைக்கப்படும். ஆகவே நீ எனக்கு எப்படி ஒரு ஆலயத்தை அமைக்க வேண்டும் என்பதை மனதிலேயே கட்டி முடித்து விடு. அதற்குக் கும்பாபிஷேகமும் செய்து வை. நான் அதில் கலந்து கொண்டு உன்னை சிறப்பிப்பேன்” என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலை எழுந்த பூசலார் மனதை ஒருநிலைப் படுத்திக்கொண்டு சிவபெருமான் கனவில் கூறியபடி ஒரு ஆலயத்தை இதயத்திலேயே அமைக்க முடிவு செய்தார். அந்த ஆலயம் குறித்து மனதிற்குள் அதன் வடிவத்தை அமைத்துக்கொண்டார். கருவறை, தியான மண்டபம் முதல், சுற்றுப்பகுதி, மதில்சுவர் என அனைத்தும் எப்படி அமைந்து இருக்க வேண்டும் என அனைத்தையும் மனதிலேயே வடிவமைத்துக்கொண்டார்.
முதல் நாள் தியானத்தில் அந்த ஆலயத்துக்கு அடித்தளம் அமைப்பதில் இருந்து அந்த ஆலயம் அமைக்க எத்தனை ஆண்டுகள் தேவையோ அத்தனை ஆண்டுகள் அந்த சிவலிங்கத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு ஆலயத்தை எழுப்பி வந்தார். முடிவாக ஆலயமும் கட்டப்பட்டு முடிவுற்றது.
இனி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியதே மீதம் இருந்தது. அதற்கும் தேவையான தேதியைக் குறித்துக்கொண்டு கும்பாபிஷேக வைபவத்திற்கான ஏற்பாடுகளையும் இதயத்துக்குள்ளேயே செய்து கும்பாபிஷேகம் தொடங்கியது.
பெரிய காட்சி தோன்றியது. அவர்கள் முன்னாள் பெரிய சிவன் ஆலயம் காணப்பட அதன் உள்ளே மேளதாளம் முழங்கிக் கொண்டிருக்க அந்த ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறுவதைப் போலவே தத்ரூபமாகக் காட்சி அமைந்திருந்தது.
அனைவரும் ஆனந்தமாக தம்மை மறந்து அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு பிரசாதத்தை வாங்கிக்கொள்ள, அந்தக் காட்சி அப்படியே மறைந்தது. அனைவரும் திக்கிட்டுப்போய் நின்றிருக்க பூசலார் கண் விழித்தார்.
தன் மனதிற்குள் கட்டிய கோயிலுக்கும். அதன் கும்பாபிஷேக வைபவத்துக்கும் வந்த விழாவை சிறப்பித்ததற்கு நன்றி கூறிய பின் அடுத்தகணம் அங்கிருந்த சிவலிங்கத்திற்குள் பூசலார் ஆத்மாவும் புகுந்துக்கொண்டு அப்படியே மறைந்து போனார்.
அடுத்த சில நாட்களிலேயே பூசலார் கட்ட நினைத்த அதே தோற்றத்தில் பல்லவ மன்னாின் முயற்சியால் நிஜத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது.
இதய நோய் உள்ளவர்கள் இன்றும் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
ஆழ்மனதில் பதிகிற புதிய லட்சியம் வாழ்க்கையாக மாறும். அழுத்தமான, தீர்மானமான தொடர்காட்சிகளே ஆழ்மனதை பாதிக்கும். அதுவே உங்களுக்கு உதவி செய்யும்.
செல்வந்தராக ஆசைப்பட்டால் தொடர்ந்து அழுத்தமாய் அதிக பணம் வைத்திருப்பதை போல தீர்க்கமான சிந்தனையை ஆழ்மனதிற்கு செலுத்த வேண்டும். நிறைய செல்வம் உடையவராக நமது ஆழ்மனதில் நினைத்தோம் என்றால் பணம் படைத்தவராக மாற முடியும் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு.
மாணவர்கள் முதல் மதிப்பெண் பெறுவேன் என்று ஆழ்மனதில் நினைத்துக் கொண்டால் முதல் மதிப்பெண் பெறுவார்கள்.
சாதாரண தொண்டன் அந்தக் காட்சியில் உயர் பதவி வகிக்க வேண்டும் என்று ஆழ்மனதில் நினைத்துக் கொண்டால் நிச்சயம் பதவிகள் பெற முடியும். நமது கருத்து, நமது கற்பனையில் உண்மையில் பதிய வேண்டும். அப்பொழுது தான் மனக்காட்சி சிறப்பானதாக அமையும். இதற்கு நமது மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.
காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் சிறிது நேரம் தனியாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்தின் போது நமது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை படிப்படியாக கற்பனை செய்யவேண்டும்.
நமது கற்பனை உண்மையானதாக இருந்தால், தியானம் முடிந்ததும் புத்துணர்ச்சியோடு எழுந்து அதற்கான முதல் பணியை தொடங்குவோம். இது தான் நடைமுறை விதி.
தொடரும்…