சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் கூட்டணியில் ‘போர் தொழில்‘ திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.
அப்ளாஸ் அண்ட் டைமண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படம் கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளியானது.சைக்கோ கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவான இந்த படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவை பட குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அசோக் செல்வன், “இதை ஒரு சக்சஸ் மீட் என்று சொல்வதை விட தேங்க்ஸ் மீட் என்றே சொல்லலாம். மக்கள் போர்த்தொழில் படத்தை தங்கள் படமாக கொண்டாடி வருகின்றனர். படம் திரையில் ஒளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஊடகங்களுக்கு போட்டு காட்டப்பட்டது. யாரேனும் ட்விஸ்ட்டை உடைத்து விடுவார்களோ என்று பயம் இருந்தது. ஆனால் அனைவரும் பாசிட்டிவான விமர்சனங்களை தந்தார்கள். நான் நிறைய நல்ல படங்கள் செய்திருந்தாலும் அதை பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டாகவில்லை. இந்த படம் எனக்கு அந்த மகிழ்ச்சியை தந்தது.
சரத்குமார் உடன் பணியாற்றியது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.
விக்னேஷ் ராஜா குறும்பட காலத்திலிருந்து எனக்கு நண்பன். இப்போது விக்னேஷ் ராஜாவை அனைவரும் பாராட்டுவதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தை எடுத்ததற்கு தயாரிப்பாளர்கள் நன்றி கூறுகிறேன். ஒரு வசனம் சொல்லி முடிக்கிறேன் ‘ஒரு வேலையை சரியா செஞ்சா மரியாதை தானாவே வரும்’ அனைவருக்கும் நன்றி” என்று பேசியுள்ளார்.
அசோக் செல்வனை தொடர்ந்து பேசிய சரத்குமார்,”விக்னேஷ் ராஜா ஒரு நல்ல இயக்குனராக வருவார் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் அதுபோல இப்போது ஒரு பெரிய இயக்குனராக வந்து விட்டார். படத்தில் தனக்கு தேவையான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார். படத்தை ஒரு ஹாலிவுட் தரத்தில் கொடுத்திருக்கிறார். இது ஒரு புதிய சாதனை படைக்கும். விக்னேஷ் ராஜா நமக்கு கிடைத்த பொக்கிஷம். அசோக் செல்வனும்,நிகிலா விமலும் சிறப்பாக நடித்திருந்தனர். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்கு கிடைத்திருக்கிறது. படக்குழுவுக்கு நன்றி. இந்த கதையை நம்பி படமாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. அதைவிட பத்திரிக்கையாளர்களான உங்களுக்குத்தான் எனது மிகப்பெரிய நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் இந்த படம் வெற்றி அடைய காரணம்”என்று பேசி உள்ளார்.
அதன் பின் பேசிய விக்னேஷ் ராஜா, “என்னோட முதல் நன்றி தயாரிப்பாளருக்கு தான். அப்பிளாஸ் நிறுவனம் படம் ஒப்பந்தமான உடன் படத்தை கமர்சியல் ஆக்காமல், நீங்கள் நினைத்ததை எடுங்கள் என்றனர். ஒரு அறிமுக இயக்குனருக்கு இது எவ்வளவு பெரிய வரம் என்பது உங்களுக்கு தெரியும்.
படக்குழுவினருக்கு நன்றி. இசையில் ஜேக்ஸ் பிஜாய் மிரட்டி இருந்தார். அவர்தான் படத்தின் கடைசியில் பாட்டு வைக்க வேண்டும் என்ற அடம் பிடித்தார். இப்போது அந்த பாட்டு இல்லாமல் படத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இந்த படத்தில் உழைத்த அத்தனை பேரும் மிக கடுமையாக உழைத்தார்கள். கதையில் இல்லாத பலத்தை நிகிலா விமல் தனது நடிப்பில் தந்துள்ளார்.
அசோக்செல்வனை கல்லூரியில் படிக்கும் போதே தெரியும். குறும்படம் என்றாலே ஓடிப்போய் நடிப்பான். அவன் ஏற்படுத்திய நெட்வொர்க் தான் எல்லோரும் இயக்குனர்களாக இருக்கிறார்கள். என்னை விட சரத்குமார் சாருக்கு தான் இந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தது.
மேலும் சரத் பாபு சார் இந்த படத்தில் நடிப்பாரா? அது இவருக்கு புரியுமா? என்ற பயம் இருந்தது. ஆனால் அவர் ரொம்பவும் அப்டேட் ஆக இருந்தார் அவர் கேட்ட கேள்வியால் இந்த படத்தில் பல திருத்தங்கள் செய்திருக்கிறோம். அவர் படம் பார்க்க முடியவில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக ஊடகங்களுக்கு படம் போட்டு கட்டப்பட்ட போது டிவிஸ்டை யாராவது உடைத்து விட்டால் என்ன ஆகும் என்ற பயம் இருந்தது. ஆனால் பிரிமியர் ஆன உடனேயே படத்தை பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள். மேலும் ஒரு படம் எந்தவித விளம்பரமும் செய்யாமல் ரசிகர்களாலும், ஊடக விமர்சனங்களாலும் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.