Homeசெய்திகள்ஆவடிதமிழில் குடமுழுக்கு நடத்த சொன்னதற்காக தாக்குதல்.. புரோகிதர்கள் மீது ஆவடி கமிஷனர் ஆபிஸில் புகார்..

தமிழில் குடமுழுக்கு நடத்த சொன்னதற்காக தாக்குதல்.. புரோகிதர்கள் மீது ஆவடி கமிஷனர் ஆபிஸில் புகார்..

-

- Advertisement -
தமிழில் குடமுழுக்கு நடத்த கோரியதற்காக தாக்குதல் நடத்திய புரோகிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த வியாழக்கிழமை அன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. முன்னதாக இந்த கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வலியுறுத்தி திருமுல்லைவாயல் சோளம்பேடு, சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் மணி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். அவர்களும் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

ஆனால் குடமுழுக்கு நாளன்று கோயில் சென்று பார்த்தபோது, ஒரே ஒரு பாடல் மட்டும் தமிழில் பாடப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மந்திரங்களும் சமஸ்கிருத மொழியிலேயே ஓதப்பட்டுள்ளன. இதனால் தமிழ் வழி கல்வி பொருளாளராக உள்ள மணி  இதுகுறித்து விசாரிப்பதற்காக  கோயில் நிர்வாகத்தினரை சந்திக்கச் சென்றிருக்கிறார்.

தமிழில் குடமுழுக்கு நடத்த சொன்னதற்காக தாக்குதல்.. புரோகிதர்கள் மீது ஆவடி கமிஷனர் ஆபிஸில் புகார்..

ஆனால் கோயில் அலுவலர் அங்கு இல்லாததால், அங்கிருந்த புரோகிதரிடம் குடமுழுக்கு தமிழில் நடத்த யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த புரோகிதர், தமிழில் எல்லாம் நடத்த முடியாது என்று கூறியதோடு,  தமிழ் எல்லாம் ஒரு மொழியே கிடையாது என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி,  அங்கிருந்த மற்ற புரோகிதர்களையும் அழைத்து தமிழ் ஆர்வலர் மணி மற்றும் அவருடன் வந்த 3 பேரையும் தாக்கியுள்ளனர். முகம் மற்றும் கழுத்து பகுதியில் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்த காவல் துறையினர் புரோகிதர்களை தடுத்து நிறுத்தி , அவர்களை வெளியே அழைத்து வந்துள்ளனர். பின்னர் இது குறித்து திருமுல்லைவாயில் காவல்  நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, அவர்கள் புகாரை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணி சேகரன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள்  அனைவரும் இணைந்து ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.  புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

MUST READ