பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22-ல் தொடக்கம்: அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ல் தொடங்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “ஜூலை 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழ்நாடு பொறியியல் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெறும். வழக்கமாக 4 சுற்றுகளாக நடத்தப்படும் கலந்தாய்வு, இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் இல்லாமல் அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான வழிமுறைகளை கையாள, முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அரசு பள்ளி மாணவர்கள் 11,804 பேருக்கு, 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 236 பேர் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்பே முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 முதல் 22-ம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டைவிட இம்முறை 3,100 இடங்கள் கூடுதலாக உள்ளன. கலந்தாய்வு முடிந்து 10 நாட்களுக்கு பிறகு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு முதலாமாண்டு வகுப்பு தொடங்கப்படும். இவ்வாண்டில் புதிதாக 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அட்வான்ஸ் கம்யூனிகேசன் டெக்னாலஜி, டிசைன் டெக்னாலஜி என்று 2 பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஜூலை 21-ல் நடத்தப்படும்” என்றார்.