நடிகர் விஜய் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் மாலை நேர பயிலகங்களை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் சமீபகாலமாக அரசியலுக்கு வருவது குறித்து பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதன்படி விஜயும், விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். ரத்த தானம் செய்வது, பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்குவது, அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்வது உள்ளிட்ட நற்பணிகளை செய்து வருகிறார்.
குறிப்பாக சமீபத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியிருந்தார். ஒவ்வொரு மாணவர்களும் தங்களின் பெற்றோர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். மேலும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியவர்களை பற்றி படித்து தெரிந்து கொள்ளுமாறும் வலியுறுத்தினார். பாட புத்தகங்களை தாண்டி சில சிந்தனை திறன்களையும் கற்றுக் கொள்ளுமாறு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்திருந்தார்.
கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜயின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒரு புதிய நலத்திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாலை நேர பள்ளிகள் தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் பள்ளிக்கு செல்ல இயலாத குழந்தைகள் மாலையில் பள்ளிகளில் வந்து பாடம் கற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படப்பிடிப்பை நிறைவு செய்த அடுத்த நாளே விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் தான் அரசியலுக்கு வந்தால் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தளபதி, அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திரு உருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்” ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று புஸ்ஸி ஆனந்த் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது.