விஜய் மக்கள் இயக்கத்தால் தொடங்கவிருக்கும் இரவு நேர பாடசாலை திட்டத்திற்கு “தளபதி விஜய் பயிலகம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தன்னுடைய பெயரில் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை அந்த இயக்கத்தின் நிர்வாகிகளை கொண்டு செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் 234 தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கினார்.
அந்த வகையில் ஏழை பள்ளி மாணவர்களுக்கு இரவு நேரத்தில் கல்வி கற்பிக்க இரவு நேரம் பாடசாலை திட்டம் ஒன்றை தொடங்குகிறார். அந்த திட்டம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அந்த இரவு நேர பாடசாலை திட்டத்திற்கு “தளபதி விஜய் பயிலகம்” என பெயர் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காமராஜர் பிறந்த நாளன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறும் மேலும் அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு புத்தகம், பேனா, பென்சில், வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளையும் வழங்க நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தளபதி மக்கள் இயக்க பொதுச் செயளாலர் என்.ஆனந்த் கூறுகையில்,” தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜீலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ,தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு புத்தகம், பேனா, பென்சில், வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம் “ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.