விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3
எல்.வி.எம்.3 எம்- 4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான்- 3. இன்று ஏவப்பட்டுள்ள சந்திரயான்- 3 விண்கலம் ஒரு மாதத்துக்கும் மேலான பயணத்துக்கு பின் நிலவைச் சுற்றிவரும். நிலவைச் சுற்றி வந்த பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் சந்திரயான் 3 விணகலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான் 2 இறங்குவதாக இருந்த அதே இடத்தில்தான் சந்திராயன் 3 விண்கலமும் தரையிறங்குகிறது. சந்திராயன் 3 விண்கலத்தில் விக்ரம் என்ற லேண்டரும் பிரக்யான் என்ற ரோவரும் இடம்பெற்றுள்ளது.
நிலவில் லேண்டர் தரையிறங்கிய பின், அதிலிருந்து ரோவர் வெளியில் வந்து நிலவின் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும். ஏதேனும் சிரமம் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து தவிர்க்கும் தொழில்நுட்பமும் விண்கலத்தில் இடம் பெற்றுள்ளது. 7 ஆய்வு கருவிகளை உள்ளடக்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் மொத்த எடை 3,900 கிலோ ஆகும். பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோமீட்டரில் உள்ள நிலவை அடைய சந்திரயான் விண்கலத்துக்கு 40 நாட்களாகும். நிலவின் தென்பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.