மூதாட்டியிடம் நகை பறித்த மூவர் கைது
வீட்டு வேலை கேட்பது போல் நடித்து தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்த மூவரை வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, காட்டு வேப்பிலைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவர்கல்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த ராணி (60) என்ற மூதாட்டியிடம் வீட்டிற்கு வேலை கேட்பது போல் வந்த இரண்டு நபர்கள் மூதாட்டியை கை கால் கட்டி விட்டு கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க நகையும், பீரோவில் இருந்து 2.5 சவரன் தங்க நகை உள்பட 5.5 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி போலீசார் இன்ஸ்பெக்டர் உமா சங்கர் தலைமையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணையில் ஈடுபட்டு 3 பேரை கைது செய்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் அந்த வீட்டிற்கு சென்று வீட்டுக்கு வேலை கேட்பது போல் விசாரித்து அங்குள்ள நிலவரங்களை நோட்டமிட்டு மூதாட்டி தனியாக இருந்ததை அறிந்து தனது உறவினர்கள் இரண்டு நபர்களை அனுப்பி கை கால்களை கட்டி தங்க நகையை பறித்து சென்றது அம்பலமானது.
சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியை சேர்ந்த நூறு அகமது மகன் முஸ்தபா (27 ) , சிவஞானம் மகன் பிரகாஷ் (31), சித்திக் அலி மனைவி ஜாகின் (39) ஆகிய மூவரையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.