ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், தமன்னா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டிய என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிள் இன்று வெளியாக இருக்கிறது. இவ்வாறாக இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
இந்நிலையில் மலையாளத்தில் இயக்குனர் ஷக்கீர், தியான் ஸ்ரீனிவாசன் கூட்டணியில் புதிய படம் உருவாகியுள்ளதாகவும், அந்தப் படத்திற்கும் ஜெயிலர் என்று தான் திரைப்படப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மலையாளத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கும் தமிழில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் 2 படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று ரஜினியின் ஜெயிலர் பட தலைப்பை மாற்றக்கோரி மலையாள ஜெயிலர் படக்குழுவினரால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கேரளாவில் மட்டும் ரஜினியின் ஜெயிலர் படத்தை வேறு தலைப்பில் வெளியிடுமாறு படக்குழு கோரிக்கை வைத்துள்ளது.
இது சம்பந்தமாக ரஜினியின் ஜெயிலர் படக்குழுவினரிடம் கேட்டபோது, தலைப்பை மாற்ற முடியாது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வழக்கு வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.