பொன்முடி சட்டப்படி எதிர்கொள்ளவேண்டும்- ஆர்.பி. உதயகுமார்
திருமங்கலம் ஒன்றிய கழகப் பொருளாளர் திரு.சுவாமிநாதன், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி பொது குழு உறுப்பினர் திருமதி.சுமதி சுவாமிநாதன் அவர்களின் மகன் S.விஸ்வா அவர்களின் மறைவிற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் இரங்கல் தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “மதுரையில் நூலகம் வேண்டும் என மக்கள் யாரும் கேட்கவில்லை. மேம்பாலம், குடிநீர், சாலை வசதி வேண்டும் என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மதுரைக்கென அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனையை அமைச்சர் பொன்முடி சட்டப்படியாக எதிர்க்கொள்ள வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பொன்முடி தெரிந்துகொள்ள வேண்டும். திமுக அரசின் கையாளாகாத செயல்பாடுகளால் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. 9 மாத இடைவெளியில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மின் கட்டணங்களை உயர்த்தியதால் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன. இதனை திமுக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
80 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என இந்த விளம்பர அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக்காடாக திமுக அரசு மாற்றிவிட்டது. அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை தாருமாறாக உயர்ந்துள்ளதால் ஏழை மக்கள் தவித்துவருகின்றனர்.” எனக் கூறினார்.