மதுக்கடைகளை குறைக்க அரசு திட்டம்- அமைச்சர் முத்துசாமி
மது விற்பனையை ஒழுங்குபடுத்தவும் பிரச்சனைகளை களையவும், விமர்சனங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறு அமைச்சர் சு.முத்துசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “மது விற்பனையை ஒழுங்குபடுத்தவும், பிரச்சனைகளை களையவுமே தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு பதிலாக விமர்சனங்கள் அதிகம் வருகின்றன. தமிழ்நாட்டில் மதுக்கடைகள் அனைத்தையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது இலக்கு இல்லை. தற்போது 500 மதுக்கடைகளை மூடியதை போல், மேலும் கடைகளை குறைக்க திட்டமிட்டு வருகிறோம்.
மது அருந்துபவர்கள் தவறான இடத்திற்கு சென்று விட கூடாது என்பதற்காகவே கடைகளின் விற்பனை இலக்கை கண்காணித்து வருகிரோம். மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படவில்லை. இது குறித்த புகார்கள் வந்தால் உடனுக்குடன் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் அமர்ந்து விற்பனை செய்யும் அளவிற்கு கூட இடம் இல்லாமல் இருக்கிறது. இது போன்ற தொழிலாளர் பிரச்சனைகளை தீர்க்க தொழிற்சங்கத்தினருடன் பேசி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு கால அவகாசம் தேவை” என விளக்கம் அளித்தார்.