தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலியான சம்பவம் அனகாபுத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் இந்திரா நகரைச் சேர்ந்த சின்னையா(வயது65)-நாகம்மாள்(வயது 59) தம்பதியினர்.இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முந்தினம் கணவன் மனைவி இருவரும் பைக்கில் பல்லாவரத்திலிருந்து தாம்பரம் கன்னடப்பாளையத்தில் உள்ள மருத்துவம்னைக்குச் சென்றுள்ளனர்.அனகாபுத்தூர் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக பைக்கானது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் படுத்து கிடந்த மாட்டின் மீது மோதி கவிழ்ந்தது.
அப்போது சாலையில் சின்னையா இடது புறமாகவும், நாகம்மாள் வலது பக்கமாக விழுந்துள்ளார்.எதிரே வந்த தண்ணீர் லாரி நாகம்மாளின் தலையில் ஏறி இறங்கியது. இதில் அவரின் தலை துண்டாகி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதைப் பார்த்த கணவர் கதறி துடித்தார்.அவரை கட்டியணைத்தபடி அவர் கதறி அழுதது காண்போரையும் கண் கலங்க வைத்துள்ளது.விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இது பற்றி தகவல் அறிந்தவுடன் குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் , பலியானவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் விபத்து குறித்து விசாரணையும் நடத்திவருகின்றனர்.அனாகாபுத்தூர்,பம்மல் பகுதியில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதாலும், படுத்துக்கிடப்பதாலும், ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதாலும்,அதிக விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாடுகளினால் சாலையில் அதிகமாக விபத்து ஏற்படுவதாக பல முறை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.மேலும் மீண்டும் இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.