காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி- டிடிவி தினகரன்
இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மன்னர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை கிண்டியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “காங்கிரஸ் அல்லது பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம். தனித்துப் போட்டியிடவும் தயாராக உள்ளோம். நவம்பர்- டிசம்பரில் கூட்டணி தொடர்பாக முடிவெடுப்போம். தலையில் தொப்பி வைத்தால் எம்ஜிஆர் ஆகிவிடுவாரா? எடப்பாடி பழனிசாமி. தெர்மாக்கோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூ இப்போது கூந்தல் விஞ்ஞானியாக மாறி இருக்கிறார். அவர் எப்போதில் இருந்து கூந்தல் விற்க தொடங்கினார் என தெரியவில்லை” என்றார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் இணைந்துள்ளார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமியிடமிருந்து மீட்டெடுப்பதே எனது நோக்கம் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். ஆனால் டிடிவி தினகரனோ, எனக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறிவருகிறார். அதனால் ஓபிஎஸ்- டிடிவி புதிய கூட்டணி அமைப்பார்களா? அவர்களின் யூகம் என்ன என்பது கேள்விக் குறியாக உள்ளது.