இரண்டாவது மனைவியை ஏமாற்றி மூன்றாவது திருமணம் செய்த பா.ஜ.க. பிரமுகர் கைது
முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணம் செய்து கொண்ட திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக துணை தலைவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடியை சேர்ந்தவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி (52). இவர் உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்ற உணவு பொருள்களை டீலர்ஷிப் எடுத்து ஆவடி சுற்றுவட்டாரப் பகுதி கடைகளில் விநியோகம் செய்து வருகிறார்.
இவர் கடந்த 2008ம் ஆண்டு நளினி என்பவரை காதலித்து முதல் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி இருக்கும் பொழுதே 2017 ஆம் ஆண்டு தேவிகா (36) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு இருவரும் ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். இதனை அறிந்து மன உளைச்சலில் இருந்து வந்த முதல் மனைவி நளினி, கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளத் தொடர்பில் இருந்து வந்த தேவிகா, முதல் மனைவியிடம் தவறுதலாக பேசியும், சில ஆபாச புகைப்படங்களை அனுப்பியும் மன வேதனை அடைய செய்ததால் நளினி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதல் மனைவி இறந்ததால் குடும்ப சூழல் காரணமாக கள்ளக் காதலி தேவிகாவை விட்டு விலக மூர்த்தி முடிவு செய்தார்.
அதன் பின்னர், எஸ்.கே.எஸ்.மூர்த்திக்கு, பாஜக மகளிர் அணியை சேர்ந்த ஜென்சி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. ஜென்சியிடம் இரண்டாவது மனைவி தேவிகா உடன் நடந்த திருமணத்தை மறைத்து கடந்த ஜூலை மாதம், ஜென்சியை 3வது திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த 2வது மனைவி தேவிகா கடந்த வாரம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் ஆவடி இணை ஆணையர் தனிப்படை அமைத்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி எஸ்.கே.எஸ்.மூர்த்தியை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.