இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு – 21 பேர் பலி
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் 24 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் உறுதி செய்துள்ளார். நேற்றிரவு சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர் இறந்தனர். சிம்லா நகரின் சம்மர் ஹில் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் இறந்தனர். பேரிடர் காரணமாக மாநிலத்தில் 752 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களில் இறப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. சிம்லா நகரில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15 முதல் 20 பேர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டுமென்றும், ஆறுகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலிருந்து மக்களை விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சுற்றுலாப்பயணிகள் யாரும் இமாச்சலப் பிரதேசத்திற்குவர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.