சென்னை ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புளியந்தோப்பு மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஜனகவள்ளி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததாகவும், ஜனகவள்ளி மரணத்திற்குக்கு நீதி கேட்டும், இதே போல் சேப்பாக்கம் மைதானம் எதிரே மழை நீர் வடிகால் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த பணியாளர் கனகராஜ் என்பவர் மரணம் அடைந்ததாகவும், கனகராஜ் மரணத்திற்கு நீதி கேட்டும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சென்னை மாநகராட்சி ஆணையரை சந்திக்க வேண்டும் எனக் கூறி மாநகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையே சென்னை மாநகராட்சி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை எனக் கூறி போராட்டக்காரர்கள் தர்ணா போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர், உயிரிழந்த கர்ப்பிணி பெண் ஜனகவள்ளி மற்றும் ஒப்பந்த பணியாளர் கனகராஜ், விவகாரத்தில் சென்னை மாநகராட்சி உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தினால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.