கொடைக்கானாலில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.டிக்கெட்டின் விலையில் மாற்றம்.
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான டிக்கெட் விலையில் திருத்தும் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சதுக்கம், குணாகுகை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பராமரிப்பு பணிக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதன் படி இன்று முதல் சுற்றுலாவரும் வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், இன்சூரன்ஸ், மாசு சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிஜம் ஏரிக்கு நாள் ஒன்றிற்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் பராமரிப்பு காரணங்களுக்காக ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் திருத்தப்பட்ட டிக்கெட் கட்டணத்தை வனத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி சுற்றுலாப்பயணிகளுடன் வரும் உள்நாட்டு பேருந்துகளுக்கு ரூ.100, கார், வேன்களுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. முதன் முறையாக வெளிநாட்டவருக்கென வனத்துறை தனியே கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
இதே போல் வனப்பகுதியிலுள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட விரும்பும் 12 வயதிற்கு மேற்பட்ட சுற்றுலா பயணியிடம் தலா ரூ.30 கட்டணம் வசூலிக்கபட உள்ளது. 5-12 வயதிற்கு கீழான சிறுவர்களுக்கு தலா ரூ.20 என்றும் அதற்கு கீழான வயதுடையவர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வெளிநாட்டவர் ஒருவர் ரூ.300 நுழைவு கட்டணமாக செலுத்தி சுற்றுலாத்தளங்களை பார்வையிட முடியும். எழில் மிகு இந்த சுற்றுலா தலங்களுக்கு கேமராக்களை கொண்டு வருபவர்களுக்கு தனியே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.