அதிமுக மாநாட்டில் உணவு இல்லாததால் சாம்பாரை குடித்து பசியாறிய தொண்டர்கள்!
அதிமுக மாநாட்டில் மதிய உணவு தீர்ந்தபின் பசியால் தவித்த அதிமுகவினர், சாம்பாரை குடித்து பசியாற்றிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வருபவர்களுக்கு உணவு அருந்துவதற்காக மூன்று உணவு கூடங்கள் வைக்கப்பட்டிருந்தது. உணவு சமையலுக்கு பத்தாயிரம் பணியாட்கள் பணி புரிவார்கள் என்று முன்னாள் அமைச்சர்கள் முன்கூட்டி ஊடகத்திற்கு தெரிவித்திருந்தனர். ஆனால் காலை சாப்பாடு சரியில்லை என்றும் இந்த சாப்பாடு மனிதர்கள் சாப்பிட முடியாது எனவும் அதிமுகவினர் வாங்கி ஆங்காங்கே சாலையில் கொட்டி சென்றனர். இதனால் மாநாடு திடல் குப்பை போல் காட்சி அளித்தது.
இதேபோல் மதிய சாப்பாட்டுக்கு புளியோதரை மற்றும் சாம்பார் சாதம் தயார் செய்யப்பட்டிருந்தது. அதிகமான நபர்கள் வந்திருந்ததால் சாப்பாடு வாங்குவதற்காக போட்டி போட்டுக்கொண்டு சாப்பாடு வாங்க அதிமுகவினர் முண்டியடித்தனர். மேலும் சாப்பாடு வாங்கியவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு இட வசதி ஏதும் செய்யாததால் கடும் வெயிலில் நின்றபடி சாப்பிட்டு ஆங்காங்கே சாப்பாட்டை தூக்கி எறிந்து சென்றனர்.
சாப்பாடு விரைவாக தீர்ந்து போனதால் ஒரு பெண்மணி டேபிளில் கடந்த சாப்பாடுகளை எடுத்து சேகரித்து சாப்பிட்ட பரிதாபம் நடந்தது. மேலும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் சமையல் கூடத்தில் உள்ளே புகுந்து பசியை போக்கிக் கொள்ள மீதம் இருந்த சாம்பாரை அள்ளி குடித்தனர். அதேபோல் சாம்பாரில் இருந்த காய்களையும் கரண்டி போட்டு முண்டியடித்து அள்ளி குடித்தனர். மேலும் ஒரு சிலர் கோபத்தின் உச்சிக்கு சென்று சமைக்காமல் வைத்திருந்த அரிசி மூட்டைகளை தூக்கி சென்றனர். மேலும் சமையல் மசாலா பொடிகள், காய்கறிகளையும் சாப்பிடுவதற்கு வைத்திருந்த சாப்பாட்டு தட்டுகளையும் மூட்ட மூட்டையாக அள்ளி சென்றனர்.