ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததால் நடிகர் நானி வருத்தம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 69-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு சென்சார் பெற்ற படங்களுக்கான தேசிய விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
வழக்கம் போல 2021 ஆம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை, கர்ணன், ஜெய் பீம் உள்ளிட்ட படங்களுக்கு எப்படியும் தேசிய விருதுகளில் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகம் தென்பட்டு வந்தது. ஆனால் அப்படி நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சிறந்த தமிழ் படத்திற்கான பிரிவில் ‘கடைசி விவசாயி’ படத்திற்கு விருது கிடைத்தது. அதுபோல ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த நல்லாண்டி தாத்தாவுக்கு சிறப்பு பிரிவில் விருது அறிவிக்கப்பட்டது. ‘இரவின் நிழல்’ படத்திற்காக ஸ்ரேயா கோஷல் சிறந்த பாடகிக்கான விருது பெற்றார். இது தவிர வேறு எந்த தமிழ் படத்திற்கும் விருது கிடைக்கவில்லை.
இந்தாண்டு தேசிய விருதுகள் அறிவிப்பில் இந்தி மற்றும் தெலுங்கு படங்களின் ஆதிக்கமே அதிகம் தென்பட்டன. இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் மீது தமிழ் ரசிகர்கள் தாண்டி இந்தியா முழுவதும் பலரும் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் ‘ஜெய் பீம்’ படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காதது பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் நானி தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட தினத்தில் ‘ஜெய் பீம்’ என்று பதிவிட்டு இதயம் நெருங்கிய எமோஜியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ‘ஜெய் பீம்’ படத்திற்கு விருது கிடைக்காததற்கு தனது வருத்தத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.