பிரபல நடிகர் விஷாலின் 46வது பிறந்தநாள் இன்று.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மலம் வருபவர் விஷால். இந்திய சினிமாவில் பொதுவாகவே ஸ்டார் அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் ஒரு நடிகருக்கு ஆக்சன் ஹீரோவை தோற்றம் இருக்க வேண்டும். அது நடிகர் விஷாலின் தோற்றத்தில் இயல்பாகவே காணப்படுகிறது. இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் இளைய மகன் ஆவார். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் சண்டைக்கோழி, திமிரு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமல்லாமல் நட்பு, காதல், செண்டிமெண்ட் என அனைத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்வார்.
அவன் இவன் திரைப்படத்தில் மாற்றுப் பார்வை கொண்டவராக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார். அதில் இவரின் நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அவன் இவன் படத்தின் ஒரு காட்சியில் நவரசங்களையும் முகத்தில் கொண்டு வந்து அனைவரையும் வியக்க வைத்தார். அதைத் தொடர்ந்து பூஜை, நான் சிகப்பு மனிதன், துப்பறிவாளன், அயோக்கியா, லத்தி என தொடர்ச்சியாக ஆக்சன் படங்களில் மிரட்டி இருந்தார். மேலும் புரட்சி தளபதியாக வலம் வரும் இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் 34 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தூத்துக்குடி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது 46வது பிறந்த நாளை விஷால் 34 படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.