இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்ற பாஜக திட்டம்
தேசிய அரசியல் களம் பரபரப்பிற்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக சனாதனம் ஒழிப்பு என்ற விஷயத்தை கையிலெடுத்து பாஜக கடும் கண்டனத்தை பதிவு செய்து வந்தது. இந்நிலையில் இன்று நாட்டின் பெயரே பாரத் என்று மாறியது போல் ஒரு விஷயம் அரங்கேறியுள்ளது.
செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ஏற்றாற்போல் குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள ஜி20 அழைப்பிதல் அதை உறுதிப்படுத்துகிறது. வரும் 9ஆம் தேதி இரவு 8 மணிக்கு விருந்து நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பிதழ் தயாராகியுள்ளது. அதில் இந்திய குடியரசு தலைவர் (President of India) என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் (President of Bharat) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கண்டதும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் முதல் ஆளாய் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுபற்றி தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த செய்தி உண்மையாக கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை உருவாக்கினார். ஒரு நாட்டின் பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பா.ஜ., கட்சி மற்றும் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், இந்தியா என்ற நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் எனவும் பலரும் குரல் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது