கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் பலி
ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய அரசு நிறுவனமான ஓ.சி.எப் -ன் குடியிருப்பு கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்வதற்காக இருவர் உள்ளே இறங்கியுள்ளனர்.
பட்டாபிராம் பகுதியை சேர்ந்த மோசஸ் (46), இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர் மற்றும் ஆவடி பஜார் தெருவை சேர்ந்த தேவன் (50), இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளன. இவர்கள் இருவரும் குடியிருப்புவளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை தூய்மை செய்வதற்காக முற்பட்டுள்ளனர்.
முதலில் மோசஸ் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியுள்ளார். அப்பொழுது விஷவாயு தாக்கி தொட்டியினுள் மயங்கி விழுந்துள்ளார்.இதானால் அதிர்ச்சியடைந்த தேவன் ,மோசஸை காப்பாற்ற முயன்று இறங்கி உள்ளார் அப்பொழுது அவருக்கும் விஷவாயு தாக்கி மூச்சடைத்து தொட்டிக்குள் விழுந்துள்ளார், உடனடியாக அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை தீயணைப்பு துறை உதவியுடன் தொட்டியினுள் இருந்த இருவரையும் ஆபத்தான நிலையில் மீட்டனர்.
இதனை தொடர்ந்து அவசர ஊர்தி மூலமாக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதித்ததில் இருவரும் உரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் உடற்கூராய்வுகாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைக்கும் விதமாக இருந்தது.
மேலும் கழிவு நீர் தொட்டியில் இறக்கிய ஒப்பந்ததார உரிமையாளர், சம்பத் மீது வழக்கு பதிந்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர்களின் இரு குடும்பங்களும் விளிம்பு நிலையில் உள்ள குடும்பம் என்பதால், தமிழக அரசு உரிய நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.