Homeசெய்திகள்தமிழ்நாடுகருகிய நெற்பயிர்கள்- ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்குக: ராமதாஸ்

கருகிய நெற்பயிர்கள்- ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்குக: ராமதாஸ்

-

கருகிய நெற்பயிர்கள்- ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்குக: ராமதாஸ்

தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராமதாஸ்

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு கண்களுக்கு எட்டிய வரை எந்த வாய்ப்புகளும் தென்படாததால், அரும்பாடுபட்டு வளர்த்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியாதோ? என்ற கவலையிலும், வேதனையிலும் காவிரி படுகை உழவர்கள் ஆழ்ந்துள்ளனர்.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஜூன் 12&ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன. ஆனால், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், கர்நாடக அணைகளில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே குறுவைப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இயற்கை கை கொடுத்தாலோ, உச்சநீதிமன்றம் நீதி வழங்கினாலோ, குறுவை பயிர்களை பெரிய அளவில் பாதிப்பின்றி காப்பாற்றி விடலாம் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில் எல்லா வாய்ப்புகளும் நழுவி விட்டன; நம்பிக்கைகள் பொய்த்து விட்டன.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில வாரங்களாகவே வினாடிக்கு 8000 கன அடிக்கும் குறைவாக தண்ணீர் தான் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த அளவு 6503 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இன்றைய நிலையில், குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், வினாடிக்கு குறைந்தது 15,000 கன அடி வீதம் காவிரியில் நீர் திறந்து விட வேண்டும். ஆனால், அதற்கு சிறிதளவு கூட வாய்ப்பு இல்லை.

கருகிய பயிர்கள் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: வறட்சியின் கோரப் பிடியில் நாகை  மாவட்டம் | கருகிய பயிர்கள் அதிகரிக்கும் உயிரிழப்புகள் ...

மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று காலை 46 அடிக்கு கீழாகவும், அணையின் நீர் இருப்பு 15 டி.எம்.சிக்கு கீழாகவும் குறைந்து விட்டன. மேட்டூர் அணையின் நீர்வரத்தும் வினாடிக்கு 3000 கன அடிக்கும் கீழ் சென்று விட்டது. இத்தகைய சூழலில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் இன்னும் ஒரு சில நாட்களுக்குக் கூட தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளிலும் சேர்த்து 64 டி.எம்.சி தண்ணீர் இருப்பதால் அம்மாநில அரசு மனம் வைத்தால் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், வினாடிக்கு 5000 கன அடி வீதம் திறக்கப்படும் தண்ணீரையே, செப்டம்பர் 12&ஆம் நாளுக்குப் பிறகு வழங்க முடியாது என்று கர்நாடகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. காவிரி சிக்கலில் கடைசி நம்பிக்கையாக இருந்த உச்சநீதிமன்றமும், காவிரி வழக்கை இம்மாதம் 21&ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டதால், இப்போதைக்கு குறுவை பயிர்களைக் காப்பாற்ற அரசிடமும், உழவர்களிடமும் எந்த தீர்வும் இல்லை.

காவிரி பாசன மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு வழியே இல்லை. குறுவைப் பயிர்கள் காப்பாற்றப்படாவிட்டால், உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படக்கூடும். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஓரளவு வெற்றியாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன் காவிரியில் தண்ணீர் கிடைக்காததால் தொடர்ந்து 8 ஆண்டுகள் உழவர்கள் பேரிழப்பை எதிர்கொண்டனர். காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களுக்கு அதேநிலை மீண்டும் ஏற்படக்கூடாது. உழவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாமல் அரசு தான் தடுக்க வேண்டும்.

காவிரி அணைகளின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரியில் தண்ணீர் இல்லாததால் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட பகுதிகளிலும் கூட தண்ணீர் பற்றாக்குறை காரணமாக போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வரும் வேளாண்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் கூட, உறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் என்.எல்.சி நிறுவனத்தால் குறுவை பயிர்கள் அழிக்கப்பட்ட போது ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதையே அளவுகோலாகக் கொண்டு தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ