மழைக்காலங்களில் குளம் போல் மழை நீர் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னைக்கு மிக அருகாமையில் ஆவடி மாநகராட்சி அமைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது போல் ஆவடி காவல் ஆணையரகம் 2022ல் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த பட்ஜெட்டில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஆவடி ரயில் நிலையமும் தரம் உயர்த்தப்பட்டது.
மேலும் ஆவடி பேருந்து நிலையம் 15 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு 1991ல் கவர்னர் ஆட்சியில் துவக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் 1998ம் ஆண்டு பயணிகள் நிழற்கொடை அமைக்கப்பட்டது. அப்போதை திமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆவடி மக்கள் அதிகம் கூடும் இடமாகவும், மாநகராட்சியின் மைய பகுதியில் சென்னை திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆவடி பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
இங்கு ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் சில வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது, ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் மதுரை, திருநெல்வேலி, திருப்பதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி,பெங்களுர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் ஆவடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு அதிக எண்ணிக்கையில் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப இந்த பேருந்து நிலையம் மேம்படுத்தப்படவில்லை. தற்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆவடி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் ஆவடி பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் மழை நீர் கடல் போல் காட்சியளித்து வருகிறது.
இந்த நுழைவு வாயில் வழியாக பயணிகள் தண்ணீரில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சேறும் சகதியுமாக உள்ளதால் கால் வைத்தால் வழுக்கி கீழே விழுந்து காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் துயரத்துக்கு ஆளாகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து முதியவர் பயணி ஒருவர் கூறும்போது, நான் சிறுவயதில் இருந்தே ஆவடி பேருந்தில் பயணித்து வருகிறேன். ஆவடி பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்குவதால் எங்களைப் போல் முதியவர்கள் கடந்து செல்ல தடுமாற்றம் ஏற்படுகிறது. இங்கு வந்து செல்லும் பயணியர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், என்றார்.