டெல்லியில் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.
ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 18வது ஜி20 மாநாடு நேற்று (செப்.09) தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளாக இன்று (செப்.10) நடைபெற்று வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று ஜி20 மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஜெர்மனி, ரஷ்யா, தென்னாபிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் உக்ரைன் போர், பயங்கரவாதம் ஒழிப்பு, அணு ஆயுதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைக் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரவு விருந்தளித்தார்.
இந்த விருந்தில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அந்த வகையில், குடியரசுத் தலைவர் அளித்த விருந்தில் கலந்து கொண்ட தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார்.
குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து, அதிபர் ஜோ பைடனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கைக்குலுக்கி, பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.