அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் நண்பர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ சத்யா என்கிற சத்யநாராயணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தமிழ்நாடு முழுவதும் 18 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ சத்யா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு – ஆந்திர எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் நண்பர் திலீப்குமார் என்பவரது அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சத்யாவின் நண்பர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சத்யாவின் நண்பரான திலீப்குமார் யாமினி பிரமோட்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு, ஆந்திராவில் உள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், மற்றும் கணினி தகவல்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.