ஆய்வை தொடங்கியது ஆதித்யா எல் – 1 விண்கலம்!
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா – எல் 1 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் பணியான ஆதித்யா எல் 1 விண்கலம், சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டர் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய சில நாட்களுக்குப் பிறகு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி-சி57 ராக்கெட் பயன்படுத்தி செப்டம்பர் 2 அன்று ஏவப்பட்டது.
குறைந்தபட்சம் 235 கி. மீ தொலைவும், அதிகபட்சம் 19,500 கி.மீ தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து பெங்களுரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது, ஆதித்யா எல்-1 விண்கலம், பூமிக்கு வெளிவட்டத்தில் அறிவியல் தரவுகளைச் சேகரிக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூப்ரா தெர்மல் அண்ட் எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) கருவியைப் பயன்படுத்தி அறிவியல் தரவை சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.