
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. மேலிடத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதி
தமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அத்துடன், 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சித் தலைமைத் தெரிவித்திருந்தது.
அ.தி.மு.க.வின் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர்கள் யாரும் கருத்துத் தெரிவிக்காத நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை (செப்.30) டெல்லிக்கு சென்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்- 60 பேர் சுருண்டு விழுந்ததால் பரபரப்பு
இந்த சூழலில், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன், கட்சியின் மேலிடத்திற்கு அறிக்கைத் தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலைக்கும், பா.ஜ.க.வுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், அ.தி.மு.க. இன்றி பா.ஜ.க.வால் வலுவான கூட்டணியை அமைக்க முடியுமா? அ.தி.மு.க. பிரிந்து சென்றதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
தமிழக பா.ஜ.க.வின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.