சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசுக்கு தர முடிவு – தெற்கு ரயில்வே
சென்னை பறக்கும் ரயில் வழித்தடமான எம்.ஆர்.டி.எஸ். சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தைத் தமிழ்நாடு அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தலைமையில் 70-க்கும் மேற்பட்டோர் எழும்பூர் ரயில் நிலையத்தில் தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் முதன்மை பொறியாளர் சுரேஷ், ரயில்வே ஊழியர்கள் ரயில்வே துப்புரவு பணியாளர்கள் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், “தூய்மை பாரத திட்டத்தின் கீழ் 1200 இடங்களில் 12 ஆயிரம் பேர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பறக்கும் ரயில் வழிதடமான MRTS சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தை தமிழ்நாடு அரசிற்கு கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தற்போது வணிக திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. தமிழ்நாடு அரசு எப்போது வேண்டும் என்று கேட்கிறார்களோ அப்போது MRTS வழித்தடம் முழுவதுமாக அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
வைகை விரைவு ரயிலை பொருத்தவரையில் பயணிகளின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு நேரம் மாற்றி அமைக்கப்படும். மற்றபடி அனைத்து ரயில்களும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும். வந்தே பாரத் அதிவிரைவு ரயிலில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் படுக்கை வசதி கொண்ட சேவை தொடங்கப்படும்” என்றார்.