இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இன்று இரவு அல்லது நாளைக்குள் மீதமுள்ளோர் தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். இதுவரை இதுபோல் தாக்குதல்களை பார்த்ததில்லை என மீட்கப்பட்டோர் தெரிவித்தனர்.
இஸ்ரேலிலிருந்து இதுவரை 128 தமிழர்கள் தொடர்பு கொண்டு உள்ளதாகவும், அதில் 48 பேர் பத்திரமாக அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் இன்று இரவோ, நாளையோ தாயகம் திரும்புவார்கள் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 2ம் கட்டமாக இன்று அதிகாலை 235 இந்தியர்கள் நாடு திரும்பினர். அவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 28 பேர் இன்று 2 விமானங்களில், சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலக தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.
அப்போது பேசிய வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இஸ்ரேல் நாட்டில் நடைபெறும் அசாதாரண சூழலில் தமிழர்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இரண்டு நாட்களாக இஸ்ரேலில் உள்ள தமிழர்களை மீட்டு வந்து டெல்லி வரையிலும் கொண்டு வந்து சேர்க்கின்ற பணியை ஒன்றிய அரசு செய்கின்றது. டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற பணியை தமிழக அரசு சார்பாக மேற்கொள்கிறோம். தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களை இல்லம் வரையிலும் கொண்டு போய் சேர்க்கும் பணியை தமிழ்நாடு அரசு செய்கிறது. இன்று இரவும், நாளையும், மீண்டும் வர இருக்கின்றார்கள். இதுவரையிலும் தமிழகத்தைச் சார்ந்த 128 பேர் பதிவு செய்திருக்கின்றார்கள். அதில் 49 பேர் தமிழக வந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வர உள்ளனர், சொந்த செலவில் 12 பேர் நேரடியாக வந்துள்ளதாக கூறினார்.
மேலும், எல்லாரிடத்திலும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளும் நேரத்தில் தங்கள் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும், தங்களோடு இருக்கின்ற மற்ற நாட்டவர்கள் அழைத்துச் செல்வதால் தனியாக இருப்பதில் அச்சம் ஏற்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் நாங்கள் வருவதற்காக ஒப்புதல் கொடுப்பதாக கூறுவதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அயலக தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், தொடர்பு கொண்டவர்களிடம் நிலைமை எப்படியென கேட்டறிந்து வருகிறோம். தொடர்பு கொள்ள முடியாதவர்களின் குடும்பத்தினர் அவசர உதவி எண்கள் மூலம் எங்களை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்வோம். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். போர் பதற்றம் அதிகம் உள்ள பகுதிகளில் தமிழர்கள் யாரும் இல்லை. போர் நடைபெறும் தலைநகர் டெல் அவிவ் பகுதியை ஒட்டிய பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அழைத்து வரப்படுகின்றனர். மீதமுள்ளவர்களும் விரைவில் தமிழகம் வந்தடைவார்கள். பணயக் கைதிகளில் யாரும் தமிழர்கள் இல்லை, என தெரிவித்தார்
தொடர்ந்து பேட்டியளித்த குணசேகரன் என்பவர், தமிழக அரசின் அமைச்சர் இந்திய தூதரகம் மூலம் பேசி, யாரெல்லாம் நிலைமை எப்படி இருந்தது என கேட்டறிந்தனர். 7ம் தேதி காலையில், அன்றுதான் மோசமான நாள். நான்காண்டுகளாக அங்கு இருந்தேன், இதுவரை அப்படியொரு போரை பார்த்ததில்லை. எங்களுடைய குழந்தையும், குடும்பத்தினரும் வெளியே வர அச்சப்பட்டதாக தெரிவித்தார்.