பணியின்போது உயிர் நீத்த காவல் துறையினர்க்கு அஞ்சலி செலுத்தும் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிர் இழந்த 188 காவல் துறையினர்க்கு, ஆவடி காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21ம் தேதியன்று, காவலர் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டு வருவது வழக்கம்.
இதனையொட்டி, கடந்த 1:09:2022 முதல் 31:08:2023 வரை இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 188 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆவடி காவல் ஆணையர் அலுவலக வளாகத்திலுள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பணியின்போது இறந்த 188 காவல்துறையினருக்கு ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அவர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் பெருமாள் மற்றும் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறந்த காவல் துறையினர்க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.