நடிகர் மன்சூர் அலிகான் 1990 கால கட்டங்களில் இருந்தே தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். பல படங்களில் வில்லனாகவும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் சரக்கு என்னும் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றன.
மேலும் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மன்சூர் அலிகான், லியோ படத்தில் தன்னுடன் நடித்த திரிஷா குறித்து மிகவும் இழிவாகவும் அநாகரிகமாகவும் பேசியிருக்கிறார். இதனை அரசியல் தலைவர்கள், திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பூ ,ரோஜா உட்பட பலரும் வன்மையாக கண்டிக்கின்றனர். நடிகைகள் குறித்து கொச்சையாக பேசிய மன்சூர் அலிகான், கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் சில நாட்களுக்கு முன்பாக நடந்த லியோ வெற்றி விழாவிலும் திரிஷா குறித்து பேசி இருக்கிறார். “திரிஷா நடிக்குதுன்னா துரத்துற சீன் மாதிரியான ஜாலியான சீன் எல்லாம் இருக்கும்னு நினைச்சேன். ஆனா லோகேஷ் தான் திரிஷா கிட்டேயே நெருங்க விடல. சரி திரிஷா இல்லனா என்ன மடோனா இருக்குல்ல மடோனா கிட்ட விளையாடலாம்னு நினைச்சேன். ஆனா அது தங்கச்சியா நடிக்குதுன்னு சொல்லிட்டாங்க” என்று பேசியிருக்கிறார். ஆனால் அப்போது மன்சூர் அலிகான் காமெடியாக தான் பேசுகிறார் என்று திரிஷா உட்பட யாரும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ள அவரின் பேட்டியின் மூலம் மன்சூர் அலிகானுக்கு பெண்கள் மத்தியில் தவறான எண்ணம் இருப்பதாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.