பான் இந்தியா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் திரைப்படம் தான் புஷ்பா 2 (புஷ்பா தி ரூல்). இது புஷ்பா 1(புஷ்பா தி ரைஸ்) படத்தின் தொடர்ச்சியாக மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை புஷ்பா படம் பெற்று தந்தது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கிய இப்படம் நாடு முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது. புஷ்பா 2 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதற்கு முன்பாக அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான அலவைக்குந்தபுரமுலோ திரைப்படமும் பெரிய ஹிட் அடித்தது. இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்தார்.
இந்நிலையில், இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைகிறது. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கிறார். இது அல்லு அர்ஜூனின் 22-வது திரைப்படம் ஆகும். இப்படத்தில் நாயகியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.