லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜவான். ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் வெளியான இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. நயன்தாராவிற்கு ஜவான் படம் பாலிவுட் அறிமுகப்படமாகும். தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
நயன்தாரா பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் கவனம் செலுத்தி வருபவர். அந்த வகையில் கோலமாவு கோகிலா, டோரா , நெற்றிக்கண், ஐரா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அன்னபூரணி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ட்ரிடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நயன்தாரா, ஜெய், சத்யராஜ் இவர்களின் கூட்டணி ராஜா ராணி படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்துள்ளது. மேலும் அன்னபூரணி திரைப்படத்தில் ரெடின், கிங்ஸ்லி சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து முதல் இரண்டு பாடல்களும் வெளியானது. மேலும் இப்படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அன்னபூரணி படத்தின் டிரைலர் நாளை மாலை 6.30 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.