தமிழகம் முழுவதும் சுமார் 2000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த மருத்துவ முகாம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில், கடந்த அக்டோபர் 23-ம் தேதி தொடங்கி, ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகம் முழுவதும் 2 ,000க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. அதன்படி, இதுவரை 10,576 முகாம்கள் கடந்த 5 வாரங்களில் நடத்தப்பட்டு, அதில் 5.22 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி மழைப்பொழிவும் அதிகம் இருப்பதால், தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் இன்று (டிசம்பர் 2) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்றும், பொதுமக்கள் இதில் பங்கேற்று, பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.