அம்பத்தூரில் கடன் பெற்று ART நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து பணம் இழந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ரோஸ் கார்டனை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50), இவருக்கு சாருமதி என்ற மனைவியும், ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர்.இவர் தனியார் பள்ளியில் வேன் ஓட்டுனராக உள்ளார். பன்னிர்செல்வம் கடனாக அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம் பல லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
மேலும் சிலரிடமும் பணம் கடனுக்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. வாங்கிய பணத்தை திரும்ப தராததால் கடன் கொடுத்தவர்கள் பன்னிர்செல்வம் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் பேசியும், வீட்டில் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்தவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்த மனைவி கணவர் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பன்னிர்செல்வம் கடனாக பெற்ற பணத்தை ART ஜுவல்லரி யில் முதலீடு செய்ததும்,அந்நிறுவனம் மூடப்பட்டதால் பணம் இழந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இறந்தவரின் மனைவி சாருமதி கூறுகையில், தனது கணவர் ART ஜுவல்லரியில் பணம் முதலீடு செய்தார்.இதே போன்று அப்பகுதியை சேர்ந்த பாபு, கணேஷ்,சங்கர், தினேஷ் ஆகியோர் கணவரை அணுகி முதலீடு செய்ய விரும்பி தனித்தனியாக பணம் முதலீடு செய்தனர்.பின்னர் மோசடி புகாரில் ART நிறுவனம் மூடப்பட்டதால் பணம் முடங்கியது. இதனால் என் கணவர் தான் நிறுவனத்தில் முதலிடு செய்ய கூறி வற்புறுத்தல் செய்ததால் இழப்பு ஏற்பட்டது என கூறி எங்களை பாபுவும் மற்றவர்களும் ஆபாசமாக பேசியும் குழந்தைகளை மிரட்டி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் தான் என் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார்.