Homeசெய்திகள்சென்னைஎச்சரிக்கை: மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை மையம் தகவல்..

எச்சரிக்கை: மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடக்கும் – வானிலை மையம் தகவல்..

-

மிக்ஜம் புயல் - சூறைக்காற்று
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல், தீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது தொடர்ந்து 5 கிலோமீட்டர் வேகத்தில் சென்னையை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் இருந்து 290கி.மீ தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ( டிச. 5ம் தேதி ) முற்பகலில் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது 90 முதல் 100 கி.மீ வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும், சில சமயங்களில் 110 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்றும் வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே மிக்ஜம் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில் , வட கடலோர மாவட்டங்களின் கரையை ஒட்டி கரையைக் கடக்கும் எனவும், தீவிர புயலாக வலுப்பெற்று கரையை கடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடர்த்தியான மேகங்கள் உருவாகி, இன்று மாலை முதல் நாளை முழுவதும் மிக மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் சுமார் 20 செ.மீ மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MUST READ