மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனை சரி செய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியது. வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. தமிழக அரசின் உத்தரவின்பேரில் பொது மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மன்ற நிர்வாகிகள் தங்களால் இயன்ற வரை உதவி புரிந்து வருகின்றனர். படகுகளில் சென்று ளெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மழைநீரில் சிக்கிக்கொண்ட மக்களை தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய், மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.