சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. 2020-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். படத்தை சூர்யா மற்றம் ஜோதிகா இணைந்து தயாரித்தனர். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இருப்பினும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
சூரரைப் போற்று திரைப்படத்திற்காக மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகருக்காக சூர்யாவுக்கும், இயக்குநருக்காக சுதா கொங்கராவுக்கும், ஜோதிகாவுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது.
புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இது அவருக்கு 100-வது திரைப்படமாகும். இது சூர்யாவின் 43-வது திரைப்படமாகும். படத்தில் மலையால நட்சத்திரங்கள் துல்கர் சல்மான், நஸ்ரியா நாசிம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவும் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தி அறிவிப்பு அண்மையில் வௌியானது.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க உள்ளது. இதனால், கல்லூரியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த படத்தின் கதைக்களம் தொடர்பாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 1965-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.