அரசை குறை கூறும் நேரம் இதுவல்ல… வெள்ள நிவாரண பணியில் கமல்ஹாசன்…!
சென்னை மக்களின் வாழ்க்கையில் மாறாத வடுவை ஏற்படுத்திச் சென்று விட்டது மிக்ஜம் புயலும் அதனால் ஏற்பட்ட மழை வெள்ளமும். பல இடங்களில் வெள்ள நீர் வடிந்து நிலைமை சீராகி வருகிறது. கழிவு நீர், வீடுகளுக்குள் புகுந்ததால் அவற்றை சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதில் மக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கழிவு நீரின் தாக்கத்தால் பலருக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டது. போதிய உணவு மற்றும் சரியான மருத்துவ வசதி கிடைக்காததாலும் உடல் மற்றும் மன ரீதியிலும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்களும்,அரசியல் கட்சிகளும்,பல சினிமா பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்து வரும் நடிகர் கமல்ஹாசன் வெள்ள பாதிப்பு குறித்த தன்னுடைய கருத்தை செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்
கூறியுள்ளார். சென்னையில் மழை வெள்ளம் என்பது வருடம்தோறும் ஏற்படும் நீண்ட காலப் பிரச்சனை. அதனை சரி செய்ய ஒரு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும். மக்கள் அவதிப்படும் இந்நேரத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து அவர்களை மீட்க வேண்டும். ஒருவரை ஒருவர் குறை சொல்லி எந்த பிரயோஜனமும் இருக்கப்போவதில்லை. அரசையும் குறை கூறுவதற்கான சரியான நேரம் இதுவல்ல. ஏற்கனவே அரசால் திட்டமிட்டு கட்டப்பட்ட மழைநீர் வடிகால் அளவைவிட தற்போது பெய்துள்ள மழையின் அளவு மிக அதிகம். எனவே தான் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் அனைவரும் இணைந்து உதவி செய்ய வேண்டும். நாளை முதல் ,”மக்கள் நீதி மய்யம்” கட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சில பகுதிகளுக்கு மருத்துவ நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதியில் சுமார் 5000 பேருக்கு உணவு வழங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.