Homeசெய்திகள்கட்டுரைஒடுக்கப்பட்ட மக்களின் உந்துசக்தி... பா.ரஞ்சித் பிறந்தநாள் இன்று...

ஒடுக்கப்பட்ட மக்களின் உந்துசக்தி… பா.ரஞ்சித் பிறந்தநாள் இன்று…

-

- Advertisement -
வரலாற்று சிறப்புமிக்க தமிழ் சினிமாவை மாற்றுப்பாதையில் பயணிக்க வைத்த பிரபல இயக்குநர் பா ரஞ்சித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

கலைத்துறை வாயிலாக மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் திரையில் காட்சிப்படுத்தும் இயக்குநர்கள் வெகு சிலரே. காதல், காமெடி, ஆக்ஷன், அதிரடி, என கமர்ஷியல் திரைப்படங்களுக்கு மத்தியில் அறிவுசார்ந்த, உரிமை சார்ந்த படங்களை இயக்குவது அரிதாகியுள்ளது. அந்த வகையில், தவிர்க்க முடியாக இயக்குநராக தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ளார் இயக்குநர் பா ரஞ்சித். கோலிவுட்டில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக சென்னை-28 திரைப்படத்தில் பணியாற்றினார். பீல் குட், விளையாட்டுத்தனமாக திரைப்படங்களை இயக்கும் வெங்கட் பிரபுவின் பட்டறையிலிருந்து வெளிவரும் இயக்குநர்கள் விளையாட்டாய் திரைப்படம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதை உடைத்து, அட்டகத்தி படத்தில் தலித் அரசியலை பேசியிருப்பார் பா ரஞ்சித். ரூட் தலையாக இளைஞர்களை கவர்ந்தாலும், அட்டகத்தி படத்தில் மாட்டுக்கறி உண்ணும் காட்சிகளை முதல்முறையாக படம்பிடித்தார்.

அடுத்ததாக இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் சுவற்றை சுற்றி நடக்கும் அரசியலை காட்சிப்படுத்தியதோடு, தலித் மக்களின் கல்வி தேவை குறித்தும பேசினார் பா ரஞ்சித். இளைஞர்களை வன்முறை பாதைக்கு அழைத்துச் செல்லும் அரசியலை படம் பிடித்துக் காட்டிய மெட்ராஸ் திரைப்படத்தின் வெற்றி பா ரஞ்சித்தை சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.

ஸ்டைலுக்கும், மாஸூக்கும் பெயர் போன ரஜினிகாந்தை முழுக்க முழுக்க வயதான தோற்றத்தில் நடிக்க வைத்து புதுமையை புதுத்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் கபாலி படத்தின் கதையை அமைத்தார் பா ரஞ்சித். முள்ளும் மலரும் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிக்கு சிறப்பாக நடிக்கும் வாய்ப்பை கபாலி திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்ததாக பலரும பாராட்டினர்.

காலா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கபாலி படத்தின் மூலம் மீண்டும் ரஜினியை இயக்கினார் பா ரஞ்சித். விட்டுப்போன இளமைக் காதலுக்காக உருகுவதும், மனைவியிடம் குழைவதுமாக மாறுபட்ட தோற்றத்தில் ரஜினியை திரையில் காட்டி அசத்தினார். நிலம் எங்கள் உரிமை என இப்படத்தில் உரக்கச் சொல்லியிருப்பார் ரஞ்சித். வடசென்னை மக்களின் வாழ்க்கையையும், தேவைகளையும் தன் எழுத்தின் வாயிலாகவும், திரையின் வாயிலாகவும் கொண்டு சேர்க்கும் பா ரஞ்சித், தமிழ் சினிமாவில் மாற்றத்தை விரும்பும் ஒரு இயக்குநர் ஆவார்.

தொடர்ந்து ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். இதில், ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திலும், தன்னுடைய வழக்கமான அரசியலை துணிச்சலாக பேசி இருப்பார் பா.ரஞ்சித். 1970ம் ஆண்டு சென்னையில் நடந்த பாக்ஸிங்கை காட்சிகளின் ஊடே கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். குறிப்பாக திமுக அதிமுக, எமர்ஜென்சி காலக்கட்டம் பற்றி பல வசனங்கள் இப்படத்தில் இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து இளம் பட்டாளத்தை வைத்து நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றன

தற்போது பா ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் தங்கலான். கோல்டு மைனில் ஏற்பட்ட கொடுமைகளையும், சம்பவங்களையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி உள்ளது. விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தங்கலான் படம் வெளியாகிறது.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார் பா ரஞ்சித். அவரது தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வு களுக்கு எதிராக உரக்கப் பேசியது. அதேபோல, பா ரஞ்சித் தயாரித்த மற்றொரு திரைப்படமான இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, உலக அமைதியையும் ஆயுதத்திற்கு எதிரான அமைதி வழியையும் போதித்தது. அவரது தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் புளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் 15-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது. இது தவிர நீலம் பண்பாட்டு மையம் மூலமாக, பல்வேறு தரப்பட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
மரத்தை சுற்றி காதல் பாடும் காவிய தமிழ் சினிமாவிற்கு விடைகொடுத்து, மக்களின் கலாச்சாரத்தையும், உரிமைகளையும் பேசி வரும் இயக்குர் பா ரஞ்சித் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ