சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது. அதே சமயம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். தற்போது தனது 170வது படத்தின் ரஜினி நடித்து வருகிறார்.
தற்காலிகமாக தலைவர் 170 என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்குகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரக்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புகள் சில தினங்களுக்கு முன்பாக திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்துக்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 73வது பிறந்த தினமான (12.12.2023) இன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதத்தில் படத்தில் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று மாலை 5 மணி அளவில் தலைவர் 170 படத்தின் டீசர் வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.