கே.ஜி.எஃப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சலார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கே ஜி எஃப் போலவே இப்படமும் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. உயிருக்கு உயிரான நண்பர்களாக இருக்கும் இருவர் ஒருவரை ஒருவர் பழிவாங்க துடிக்கும் எதிரிகளாக மாறுவதே படத்தின் கதை என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ட்ரெய்லரிலும் காட்சிகள் அதுபோலத்தான் காண்பிக்கப்பட்டிருந்தன. எனவே படத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்திவிராஜ் ஆகியோருக்கிடையே இருக்கும் நட்பு மிக ஆழமானதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் போலத் தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக “ஆகாச சூரியனே” பாடல் நாளை வெளியாகவுள்ளது. இதனை ஒரு போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்போஸ்டரில் இளம் வயது பிரபாஸ், பிரித்திவிராஜின் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது போன்ற ஸ்டில் இடம் பெற்றுள்ளது. எனவே இப்பாடல் இருவருக்குமான நட்பைப் பற்றிக் கூறுவது போன்ற பாடலாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இப்பாடலானது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. சலார் பட வெளியீட்டுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இப்பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு வலு சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.