நடிகர் சூரி, நகைச்சுவை நடிகராக இருந்து பின்னர் கதாநாயகனாக மாறி தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கதாநாயகனாக இவருடைய முதல் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த “விடுதலை” மாபெரும் வெற்றியைப் பெற்றது. நடிகர் சூரியின் நடிப்பும் படத்தில் பெருமளவு பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சூரி. அடுத்ததாக இவர் ராம் இயக்கத்தில் “ஏழு கடல் ஏழு மலை” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நிவின் பாலி மற்றும் அஞ்சலி ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில், வினோத் ராஜ் பி.எஸ் இயக்கத்தில் “கொட்டுக்காளி” என்னும் படத்திலும் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். புகழ்பெற்ற மலையாள நடிகை அன்னா பென் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரும் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியது. சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் சூரி நடித்துள்ள இந்த மூன்று படங்களுமே ஒவ்வொரு ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் திரையிடத் தேர்வாகியுள்ளன. உலக அளவில் புகழ்பெற்ற நெதர்லாந்தின் ரோட்டர்டம் பன்னாட்டு திரைப்பட விழாவில் “ஏழு கடல் ஏழு மலை” திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதேபோல் உலகப்புகழ் பெற்ற பெர்லின் பன்னாட்டு திரைப்பட விழாவில் சூரியின் “கொட்டுக்காளி” திரைப்படம் திரையிடப்பட உள்ளது. கோவா பன்னாட்டு திரைப்பட விழாவில் “விடுதலை” படம் திரையிடப்பட்டது. இவ்வாறாக கமர்சியல் கதைகள் இல்லாமல், முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து உலக அளவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறார் நடிகர் சூரி. விரைவில் ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
உலக அளவில் முத்திரை பதிக்கும் நடிகர் சூரி…ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்படும் மூன்று படங்கள்!
-