சூது கவ்வும் இரண்டாம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவின் டார்க் ஹியூமர் கதைக்களத்தை கொண்டு வந்து வெற்றி பெற்றவர் நலன் குமாரசாமி. வளர்ந்து வந்த விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர். இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக சமீபத்தில் அடிக்கடி தகவல்கள் வெளியாகின. அது தற்போது உறுது ஆகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற பெயரில் முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. மிர்ச்சி சிவா இப்படத்தில் நாயகனாக நடிக்க, கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.எஸ். அர்ஜுன் படத்தை இயக்குகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சத்யராஜ், ராதாரவி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வௌியாகும் என்று கூறப்படுகிறது.