டன்கி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்குமார் இரானி இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான திரைப்படம் டன்கி. இந்த ஆண்டில் வெளியாகும் ஷாருக்கான் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். விக்கி கவுஷல், போமன் இரானி, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ப்ரிதம் இசையமைத்துள்ள இந்த படத்தை, ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
’பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஷாருக்கானுக்கு இந்த ஆண்டு வெளியாகும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. அதற்கு முன்பாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த திரைப்படம் பதான். தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஆயிரத்து நூறு கோடிக்கு மேல் இத்திரைப்படமும் வசூலித்தது.
அந்த வகையில், மூன்றாவதாக டன்கி திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் நேற்று வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டும் 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.