நகைச்சுவை என்ற மருந்தால் மக்களின் மனதில் இருந்த கவலைகளை மறக்கடித்த மகா மனிதன் சார்லி சாப்ளினின் நினைவு நாள் இன்று.
1889-ம் ஆண்டு லண்டனில் ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தவர் சார்லி சாப்ளின். சிறிய கோட், ஹிட்லர் மீசை, தலைக்கு மேல் தொப்பி, சிறு தாடி, விசித்திர நடை என தனது உடல் மொழியின் மூலமாகவே மக்களுக்கு கிச்சுகிச்சு மூட்டுபவர் சார்லி. தன் நகைச்சுவையால் உலகம் மக்கள் அனைவரையும் இன்று வரை தன் ரசிகர்களாக கட்டிப்போட்டுள்ள சார்லி சாப்லின் இறந்த தினம் இன்று. மேடை கலைஞருக்கு மகனாக பிறந்தவர் சார்லி சாப்ளின். தந்தை விட்டுச் சென்றதால் கடும் வறுமைக்கு ஆளான அவர், மது விடுதிகளில் நடித்து பணம் சம்பாதிக்க தொடங்கினார். சாப்ளினின் உயரம் குறைவே அவருக்கு சாதகமாக அமைந்தது.
வில்லியம் ஜில்லட்டின் நாடகத்தில் ஒரு பணிப்பையன் வேடம் சாப்ளினுக்கு கிடைத்தது. இந்த நாடகத்தில் சாப்ளின் புகழ் உயரத் தொடங்கியது. அவரது படங்கள் பத்திரிகைகளில் வரத் தொடங்கியது. இதையடுத்து சாப்ளின் அடுத்தடுத்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இதற்கிடையே 1912-ல் கார்னோ என்ற குழுவுடன் அமெரிக்கா பயணம், சாப்ளினுக்கு வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இவர் நடித்த முதல் திரைப்படம் மேக்கிங் ஏ லிவிங். இது 1914ல் வெளியானது. இதையடுத்து, கிட் ஆட்டோர் ரேசஸ் அட் வெனில் என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சார்லினின் வாழ்வில் ஏறுமுகம் தான்.
1975-ம் ஆண்டு அவருக்கு பிரிட்டிஷ் அரசு சர் பட்டம் வழங்கியது. இரண்டு ஆஸ்கர் சிறப்பு விருதுகளை பெற்றுள்ளார். 1985-ம் ஆண்டு அவர் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது இங்கிலாந்து அரசு. இந்நிலைியல், சார்லி சாப்லின் கடந்த 1977-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி காலமானார்.